சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
130   பழநி திருப்புகழ் ( - வாரியார் # 162 )  

கரிய மேகமதோ

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனன தானன தானன தானன
     தனன தானன தானன தானன
          தனன தானன தானன தானன ...... தனதான

கரிய மேகம தோஇரு ளோகுழல்
     அரிய பூரண மாமதி யோமுகம்
          கணைகொ லோஅயில் வேலது வோவிழி ...... யிதழ்பாகோ
கமுகு தானிக ரோவளை யோகளம்
     அரிய மாமல ரோதுளி ரோகரம்
          கனக மேரது வோகுட மோமுலை ...... மொழிதேனோ
கருணை மால்துயி லாலிலை யோவயி
     றிடைய தீரொரு நூலது வோவென
          கனக மாமயில் போல்மட வாருடன் ...... மிகநாடி
கசட னாய்வய தாயொரு நூறுசெல்
     வதனின் மேலென தாவியை நீயிரு
          கமல மீதினி லேவர வேயருள் ...... புரிவாயே
திரிபு ராதிகள் நீறெழ வேமிக
     மதனை யேவிழி யால்விழ வேசெயும்
          சிவசொ ரூபம கேசுர னீடிய ...... தனயோனே
சினம தாய்வரு சூரர்கள் வேரற
     அமரர் வானவர் வாடிடு தேவர்கள்
          சிறைகள் மீளவு மேவடி வேல்விடு ...... முருகோனே
பரிவு சேர்கம லாலய சீதன
     மருவு வார்திரு மாலரி நாரணர்
          பழைய மாயவர் மாதவ னார்திரு ...... மருகோனே
பனக மாமணி தேவிக்ரு பாகரி
     குமர னேபதி னாலுல கோர்புகழ்
          பழநி மாமலை மீதினி லேயுறை ...... பெருமாளே.
Easy Version:
கரிய மேகமதோ இருளோ குழல்
அரிய பூரண மாமதியோ முகம்
கணை கொலோ அயில் வேல் அதுவோ விழி இதழ் பாகோ
கமுகு தான் நிகரோ வளையோ களம்
அரிய மாமலரோ துளிரோ கரம்
கனக மேரு அதுவோ குடமோ முலை மொழி தேனோ
கருணை மால் துயில் ஆல் இலையோ வயிறு
இடை அது ஈர் ஒரு நூல் அதுவோ என
கனக மாமயில் போல் மடவாருடன் மிக நாடி
கசடனாய் வயதாய் ஒரு நூறு செல்வதனின் மேல் எனது
ஆவியை
நீ இரு கமல மீதினிலே வரவே அருள் புரிவாயே
திரி புராதிகள் நீறு எழவே மிக மதனையே விழியால்
விழவே செ(ய்)யும்
சிவ சொரூப மகேசுரன் நீடிய தனயோனே
சினமதாய் வரு சூரர்கள் வேர் அற அமரர் வானவர் வாடிடு
தேவர்கள் சிறைகள் மீளவுமே வடிவேல் விடு(ம்)
முருகோனே
பரிவு சேர் கமல ஆலய சீ தனம் மருவுவார் திரு மால் அரி
நாரணர் பழைய மாயவர் மாதவனார் திரு மருகோனே
பனகமாம் அணி தேவி க்ருபை ஆகரி குமரனே
பதி நாலு உலகோர் புகழ் பழநி மா மலை மீதினிலே உறை
பெருமாளே.
Add (additional) Audio/Video Link

கரிய மேகமதோ இருளோ குழல் ... கூந்தல் கரு நிறமான மேகமோ,
இருள் படலமோ?
அரிய பூரண மாமதியோ முகம் ... முகம் அருமையான சிறந்த முழு
நிலவோ?
கணை கொலோ அயில் வேல் அதுவோ விழி இதழ் பாகோ ...
கண்கள் அம்போ, கூர்மையான வேல்தானோ? உதடுகள் சர்க்கரைப்
பாகோ?
கமுகு தான் நிகரோ வளையோ களம் ... கழுத்து பாக்கு மரத்தை
நிகரானதோ, சங்கோ?
அரிய மாமலரோ துளிரோ கரம் ... கை அருமையான சிறந்த
தாமரை மலரோ, இளந்தளிரோ?
கனக மேரு அதுவோ குடமோ முலை மொழி தேனோ ...
மார்பகம் பொன் நிறமான மேரு மலையோ, பொற் குடமோ? பேச்சு
தேனோ?
கருணை மால் துயில் ஆல் இலையோ வயிறு ... வயிறு,
கருணாமூர்த்தி திருமால் துயில் கொள்ளும் ஆலிலையோ?
இடை அது ஈர் ஒரு நூல் அதுவோ என ... இடுப்பு ஆனது
ஈர்க்குச்சியோ, ஒரு நூலோ? என்று சொல்லுமாறு உள்ள
கனக மாமயில் போல் மடவாருடன் மிக நாடி ... பொன்
நிறத்து அழகிய மயில் போன்ற விலைமாதர்களை மிகவும் விரும்பி,
கசடனாய் வயதாய் ஒரு நூறு செல்வதனின் மேல் எனது
ஆவியை
... குற்றமுள்ளவனாய் வயது ஏறி ஒரு நூறு வருடத்துக்கு மேல்
வாழ்வதைக் காட்டிலும் மேலானது (என்னவென்றால்) எனது உயிரை
நீ இரு கமல மீதினிலே வரவே அருள் புரிவாயே ... நீ
இப்போது உன்னுடைய இரண்டு தாமரை போன்ற திருவடிகளில்
சேரும்படி அருள் புரிவதுதான்.
திரி புராதிகள் நீறு எழவே மிக மதனையே விழியால்
விழவே செ(ய்)யும்
... திரிபுரத்தில் உள்ளவர்கள் வெந்து
சாம்பராகுமாறும், மிக்கு வந்த மன்மதனை நெற்றிக் கண்ணால்
(எரித்து) மாண்டு வீழுமாறும் செய்த
சிவ சொரூப மகேசுரன் நீடிய தனயோனே ... சிவ சொரூபனான
மகேஸ்வரனின் பெருமை மிக்க மகனே,
சினமதாய் வரு சூரர்கள் வேர் அற அமரர் வானவர் வாடிடு
தேவர்கள் சிறைகள் மீளவுமே வடிவேல் விடு(ம்)
முருகோனே
... கோபத்துடன் வந்த அசுரர்கள் வேர் அறும்படியும்,
அமரரும், விண்ணோர்களும், வாட்டம் உற்று இருந்த தேவர்களும்
சிறையினின்று மீளும்படியும் கூரிய வேலைச் செலுத்திய முருகோனே,
பரிவு சேர் கமல ஆலய சீ தனம் மருவுவார் திரு மால் அரி
நாரணர் பழைய மாயவர் மாதவனார் திரு மருகோனே
...
அன்பு கொண்டு தாமரைக் கோயிலில் வாழ்கின்ற லக்ஷ்மியின்
மார்பைத் தழுவுகின்றவராகிய திருமால், பாவங்களைப் போக்கும்
நாராயணர், பழமை வாய்ந்த, மாயையில் வல்லவரும், பெரிய
தவத்துக்கு உரியவரும் ஆகிய திருமாலின் அழகிய மருகனே.
பனகமாம் அணி தேவி க்ருபை ஆகரி குமரனே ... பாம்பாகிய
அணிகலத்தை உடைய தேவியும், கருணைக்கு உறைவிடம்
ஆனவளும் ஆகிய பார்வதி அம்மையின் குமாரனே,
பதி நாலு உலகோர் புகழ் பழநி மா மலை மீதினிலே உறை
பெருமாளே.
... பதினான்கு உலகத்தில் உள்ளவர்கள் அனைவரும்
போற்றும் பழனி மலை மேல் வீற்றிருக்கும் பெருமாளே.

Similar songs:

130 - கரிய மேகமதோ (பழநி)

தனன தானன தானன தானன
     தனன தானன தானன தானன
          தனன தானன தானன தானன ...... தனதான

384 - அமுதம் ஊறு சொல் (திருவருணை)

தனன தானன தானன தானன
     தனன தானன தானன தானன
          தனன தானன தானன தானன ...... தனதான

385 - உருகும் மாமெழுகாக (திருவருணை)

தனன தானன தானன தானன
     தனன தானன தானன தானன
          தனன தானன தானன தானன ...... தனதான

837 - சுருதியாய் (திருக்குடவாயில்)

தனன தானன தானன தானன
     தனன தானன தானன தானன
          தனன தானன தானன தானன ...... தனதான

887 - சொரியு மாமுகில் (திருவையாறு)

தனன தானன தானன தானன
     தனன தானன தானன தானன
          தனன தானன தானன தானன ...... தனதான

Songs from this thalam பழநி

887 - சொரியு மாமுகில்

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
 


1
   
    send corrections and suggestions to admin @ sivaya.org

thiruppugazh song